ரூ.50,000 மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த பான் எண் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை வங்கிகள் உடனடியாக நிறுத்துமாறு கடந்த மே 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ.50,000 மேல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த பான் எண் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும் என்றும், வாடிக்கையாளர் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், வேறு வங்கிகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.